தமிழ்நாடு

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா? – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்

Published

on

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் சசிகலாவை தங்கள் கட்சியிலோ கூட்டணியிலோ இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பதற்கு ஏற்கெனவே பாஜக உங்களிடம் பரிந்துரை செய்திருக்கிறதா?’ என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. எங்கள் கட்சி விவகாரத்தில் பாஜக என்றும் தலையிட்டது கிடையாது. எங்களுக்கு நிர்பந்தம் கொடுப்பது போன்று பெரிய வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். அமமுகவும், சசிகலாவும் அதிமுகவில் இணைவதற்கான எந்த சாத்தியமும் இல்லை. அதற்கு 100% வாய்ப்பே இல்லை. அதுதான் உறுதியான நிலை.

தன் தலைமையில் கூட்டணி அமையும் என, டிடிவி தினகரன் கூறுகிறார். எள்ளி நகையாடக்கூடிய அளவுக்குத்தான் அவரது பேச்சு இருக்கிறது. குள்ளநரிகளின் கூட்டமாக இருக்கிறது அமமுக. சிங்கங்கள் கூட்டமாக இருக்கின்றது அதிமுக. இரண்டும் எப்படி இணையும்? அவருடைய பேச்சை ஒரு நகைச்சுவையாகத் தான் மக்கள் எடுத்துக் கொள்வார்கள்.

கட்சியை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கூட்டணியில் பாஜக ஒரு அங்கம். எங்கள் தலைமையில் அவர்கள் இருக்கின்றனர். ஆனால், எங்கள் கட்சி உள்விவகாரம் அது. அதில் தலையிடாத கொள்கையைத்தான் பாஜக கடைப்பிடிக்கிறது. அவரின் யோசனையாக கூட இதனை சொல்லியிருக்கலாம். அந்த யோசனையைத்தான் நாங்கள் நிராகரித்துவிட்டோமே. எந்த நிலையிலும் அதுகுறித்து பேசுவதற்கு வாய்ப்பில்லை’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version