தமிழ்நாடு

அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்: சர்கார் சர்ச்சை குறித்து பிரபலங்கள் கருத்து!

Published

on

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அந்த படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சர்கார் படத்தை மீண்டும் தணிக்கை செய்து சில காட்சிகளை எடிட் செய்ய உள்ளதாக தகவல்கள வருகின்றன.

இந்நிலையில் சர்கார் சர்ச்சை குறித்து பல்வேறு திரை பிரபலங்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித், சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து/இழந்து போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்படத்துக்கு தணிக்கை துறை அனுமதி அளித்தபின் இயக்குநரின் சுதந்திரத்தில் அத்துமீறும் உரிமையை எது கொடுத்தது? அல்லது யார் கொடுத்தார்கள்? இதிலிருந்து ஒரு கதையில் வரும் சிறு புனைவுகூட தமிழகத்தைக் கொள்ளையடிக்கும் சின்ன புத்திக்காரர்களை அச்சுறுத்துகிறது என்பது தெரிகிறது.

அரசியலும் அதிகாரமும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கையை முறுக்கிக் கொண்டு, அச்சுறுத்தி, பய உணர்வை ஏற்படுத்துவது இது முதன்முறை அல்லவே. விஜய்யின் முந்தையப் படங்களுக்கும் இப்படியான எதிர்ப்பு கிளம்பியதை நாம் பார்த்திருக்கிறோம். நம் எம்எல்ஏக்களை எது இப்படியெல்லாம் அச்சம் கொள்ளவைக்கிறது? அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தைத் தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பின்னர் எதற்காக தணிக்கை துறை இருக்கிறது? பொது இடங்களில் வன்முறையைப் பிரயோகிப்பது சரியல்ல என ஜி.வி.பிரகாஷ் குமாரும், படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு மக்களும் பார்த்துவிட்டார்கள். பின் எதற்கு இவர்கள் அழுகையும் கூக்குரலுமிடுகின்றனர் என நடிகர் விஷாலும் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version