தமிழ்நாடு

சரவண பவன் உரிமையாளர் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும்: நீதிமன்றம் அதிரடி!

Published

on

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல உணவகமான சரவண பவனின் உரிமையாளர் ராஜகோபால் உடனடியாக சிறைக்கு செல்ல சரணடையும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்றார். இந்நிலையில் ஜீவஜோதி பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் கடந்த 2001-ஆம் ஆண்டு சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்தார்.

இந்த வழக்கில் ராஜகோபாலின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து கடந்த 2004-ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் இதனை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் ராஜகோபால்.

உச்ச நீதிமன்றமும் ராஜகோபாலின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய உத்தரவிட்டது. ஆனால் ராஜகோபால் மருத்துவமனை ஒன்றில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மற்ற குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.

இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சரணடைவதை தள்ளி வைக்குமாறு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபால் ஒரு நாள் கூட தாமதிக்காமல் சரணடையும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஜீவஜோதி வரவேற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version