தமிழ்நாடு

‘எனக்கு முதல்வராகும் ஆசை உள்ளது’- சரத் குமார் பேச்சால் ஷாக் ஆன கமல் ரசிகர்கள்

Published

on

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். இந்நிலையில் கோவையில் போட்டியிடும் மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ச.ம.க தலைவர் சரத் குமார் பிரச்சாரம் செய்தார். 

அப்போது அவர், ‘எனக்கு 25 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருக்கிறது. அப்போது தொலைக்காட்சிகள், ஊடகங்கள் அதிக அளவில் இல்லாததால், எனது போராட்டங்கள், சேவைகள் மக்களைச் சரியாகச் சென்றடையவில்லை. எனது அரசியல் பயணம் நீண்ட நெடிய பயணம்.

திமுக, அதிமுகவில் இருந்துள்ளேன். நான் வீடு வீடாக பேப்பர் போட்டு, சைக்கிள் கடையில் வேலை பார்த்து, நடிகனாகி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த மரியாதையின் காரணமாகவே, நான் 10 ஆண்டுகாலம் அதிமுகவுடன் இருந்தேன்.

கமலை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கமல்ஹாசனுக்கு என்ன அனுபவம் உள்ளது எனக் கேட்கின்றார். நான் எம்எல்ஏ ஆனபோது, எனக்கு அனுபவம் இல்லை. ஆனால், நான் சிறப்பாகப் பணியாற்றினேன். அதேபோல், கமல்ஹாசனும் சிறப்பாகப் பணியாற்றுவார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், காவல்துறையினர் பணியின்போது உயிரிழந்தால், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், காவல்துறையினரையே மிரட்டுகின்றார். இப்போதே இப்படி மிரட்டுபவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதைக் காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். தற்போது எங்களது நோக்கம், இங்குள்ள இரு கட்சிகளையும் அகற்ற வேண்டும்’ என்று பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version