இந்தியா

‘யாரும் யாரைப் பற்றியும் பேசக் கூடாதா..?’- விவசாயிகள் போராட்டம் பற்றி வைரலான கிரிக்கெட் வீரர் சந்தீப் ஷர்மாவின் ட்வீட்

Published

on

விவசாயிகள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், அதற்கு சர்வதேச ஆதரவுக் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர், ‘வெளியில் இருந்து யாரும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது’ என்னும் ரீதியில் ட்வீட்டியுள்ளனர்.

இவை அனைத்தும் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகவே உள்ளது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் நடிகை ரிஹானா, டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்திட்டது தான், கிரிக்கெட் வீரர்களின் திடீர் கொந்தளிப்புக்குக் காரணமாகவும் அமைந்தது.

இப்படியான சூழலில் இளம் கிரிக்கெட் வீரரான சந்தீப் ஷர்மா, மற்ற கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மத்திய அரசை சாடும் வகையில் கருத்து கூறியுள்ளார். அவர், ‘அவர்கள் சொல்லும் லாஜிக்படி, யாரும் யாரைப் பற்றியும் கவலை கொள்ளக் கூடாது. ஏன் என்றால், எந்த ஒரு விஷயமும் ஒருவரின் தனிப்பட்ட விவகாரமாகத்தான் இருக்கும்’ என்று கேலி செய்யும் தொனியில் ட்வீட்டினார்.

அவர் மேலும், ‘அவர்களின் லாஜிக்படி ஜெர்மனிக்கு வெளியே இருந்தவர்கள் யூதர்களின் படுகொலை குறித்துப் பேசியிருக்கக் கூடாது. பாகிஸ்தானுக்கு வெளியே அங்கு சிறுபான்மையினர் மேலே நடக்கும் தாக்குதல்களைப் பற்றிப் பேசக்கூடாது. இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது குறித்தோ, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்தோ பேசக்கூடாது. இவை அனைத்தும் அந்தந்த நாட்டின் உள் விவகாரங்கள் தானே’ என்றும் சூசகமாக விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை சாடியுள்ளார்.

சந்தீப் ஷர்மா, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். சந்தீப் பதிவிட்ட ட்வீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்கிரீன் ஷாட் இதோ:

 

 

seithichurul

Trending

Exit mobile version