தமிழ்நாடு

பாஜகவில் இணைகிறாரா சைதை துரைசாமி? அவரே அளித்த விளக்கம்!

Published

on

பாஜகவில் சைதை துரைசாமி இணைய போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை நந்தனம் புத்தக கண்காட்சியில் மோடி குறித்த புத்தகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சைதை துரைசாமி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக முக்கிய விழாக்களில் கூட கலந்து கொள்ளாத சைதை துரைசாமி, பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அவர் பாஜகவில் இணைவாரா என்ற வதந்தி ஏற்பட்டது. ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சைதை துரைசாமி கூறியிருப்பதாவது:

நான் ஒரு கல்வியாளராக பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இலவச ஐஏஎஸ் அகடமி நடத்துவதால் பல கட்சியினரும் பல நிகழ்ச்சிகளிலும் என்னை அழைத்து சிறப்பு விருந்தினராக பேச வைத்திருக்கிறார்கள். அதேபோன்றுதான் தற்போது பாஜக நடத்தும் நிகழ்ச்சியிலும் கல்வியாளராக மட்டுமே பங்கேற்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் அரசியல் சாயம் பூசுகிறீர்கள்? ஏன் இப்படி என்னை பற்றிய சர்ச்சைகளை கிளப்புகிறார்கள்?! நேற்றும் இன்றும் என்றும் என்றென்றும் எம்ஜிஆரின் தொண்டனாகவே இருந்து வருகிறேன் இருப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை.

நான் நினைத்திருந்தால் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். குறிப்பாக திமுகவுக்கு சென்றிருக்கலாம் சிவப்புக் கம்பள வரவேற்பு எனக்கு அப்போதே கொடுக்கப்பட்டது. எந்தக் காலகட்டத்திலும் பணத்திற்காக கட்சி மாறும் நிலைப்பாட்டை எடுத்தது இல்லை. நான் ஒரு கொள்கையோடு பயணித்துக் கொண்டிருப்பவன். நான் நினைத்திருந்தால் எத்தனையோ வழிகளில் எப்படி எப்படியோ சம்பாதித்து இருக்கலாம் ஆனால் அதற்கான ஆள் நானில்லை.

இனி வரும் காலங்களிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கல்வியாளராக நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். வீணாக என்னைப் பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் நான் யாருக்கும் எதற்கும் பயந்தவன் அல்ல நேர்மையோடு ஒழுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவன் என்பது என்னை சார்ந்தவர்களுக்கு நன்கு தெரியும்” இவ்வாறு சைதை துரைசாமி வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

 

Trending

Exit mobile version