தமிழ்நாடு

‘கல்வி தொலைக்காட்சியில்’ திருவள்ளுவருக்கு காவி உடை..!- தமிழக அரசை வெளுக்கும் தினகரன்

Published

on

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி நடந்த ஆன்லைன் வகுப்பு ஒன்றில், காவி உடை போட்ட திருவள்ளுவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்தான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக அரசின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அவர், ‘உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல.

அதிலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது. வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர். அவரது சிந்தனைகள், மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அதிலும் குறுகிய எண்ணத்தோடு செயல்படக்கூடாது. எனவே, தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கொதிப்புடன் கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version