தமிழ்நாடு

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 கொடுக்கும் திட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published

on

“விடியலுக்கான முழக்கம்” என்கிற பெயரில் திமுக இன்று மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்கிற திட்டத்தைப் பற்றி பேசியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஸ்டாலின், “தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது. அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது’ எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 7 உறுதிமொழிகளை அறிவித்தார். அது, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவை ஆகும்.

7 உறுதிமொழிகளின் விளக்கம்

பொருளாதாரம் – வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு:

ரூபாய் 35 இலட்சம் கோடியைத் தாண்டும் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி. தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூயாப் 4 இலட்சத்துக்கும் மேலாக உயர்த்துதல். ஆண்டுக்கு 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாக்க் குறைத்தல். கடும் வறுமையில் வாடும் 1 கோடிப் பேரை மீட்டெடுத்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் ஒருவரும் இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை முன்னெடுத்தல்.

வேளாண்மை – மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி:

தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து இதனை 75 விழுக்காடாக உயர்த்துதல். தமிழ்நாட்டில் இப்போது இருபோக நிலங்களாக 10 இலட்சம் ஹெக்டேர் உள்ளது. இதனை 20 இலட்சம் ஹெக்டேராக உயர்த்துதல். உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், கரும்பு, பருத்தி, சூரியகாந்தி ஆகிய பணப் பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகத்தை இடம் பெறச் செய்தல்.

நீர்வளம் – குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்:

தனி நபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 இலட்சம் லிட்டரில் இருந்து 10 இலட்சம் லிட்டராக உயர்த்துதல். நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைத்தல். மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்துதல். பசுமைப் பரப்பளவை 20.27 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு 7.5 இலட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கூடுதலாக இணைத்தல்.

கல்வி மற்றும் சுகாதாரம் – அனைவருக்கும் உயர்நிலை கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்:

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து செலவிடப்படும் நிதியளவை மூன்று மடங்கு உயர்த்துதல். கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம் பெறச் செய்தல். பள்ளிக் கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை 16 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைத்தல். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் அமைத்தல். மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழிற்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இரட்டித்தல்.

சமூகநீதி- அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் அமைப்போம்:

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குதல். பட்டியலினத்தவர் – பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்கு உயர்த்தி வழங்குதல். மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழித்தல்.

நகர்ப்புற வளர்ச்சி- எழில்மிகு மாநகரங்களின் மாநிலமாக தமிழகம்:

கூடுதலாக 36 இலட்சம் வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளில் அளவை 35 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாக உயர்த்துதல். அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச் செயலுறச் செய்தல். புதிதாக 9.75 இலட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவை 16.6 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைத்தல். நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்களை இடம் பெறச் செய்தல்.

ஊரக கட்டமைப்பு- உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம்:

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இப்போது 57 விழுக்காடு கான்கிரீட் வீடுகள் உள்ளன. 20 இலட்சம் கான்கிரீட் வீடுகளைப் புதிதாகக் கட்டித் தந்து இதனை 85 விழுக்காட்டுக்கு உயர்த்துதல். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குதல். எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத சாலை இணைப்புகளையும், வடிகால் அமைப்புகளையும் கட்டமைத்தல். எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்ற இணைய வசதி ஏற்படுத்துதல். குறைந்தபட்சம் 50 விழுக்காடு கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச் செயலுறச் செய்தல்.

Trending

Exit mobile version