கிரிக்கெட்

அடுத்த போட்டியில் ஒழுங்கா விளையாடுற வழியை பாருங்க.. மூத்த வீரர்களுக்கு விவிஎஸ் லக்ஷ்மன் அறிவுரை!

Published

on

மூத்த வீரர்கள் ரஹானே மற்றும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு வீரர்களின் மோசமான பேட்டிங்கும் ஒரு காரணம். முதல் இன்னிங்சில் நிரூபிக்க தவறிய ஷுப்மன் கில், விராட் கோலி போன்றோர் இரண்டாவது இன்னிங்சில் தங்களுடைய பங்களிப்பை வெளிப்படுத்தினர். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பிய பண்ட், வாஷிங்டன் சுந்தர், புஜாரா போன்றோர் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடினர். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஏமாற்றம் கொடுத்தது இரண்டு மூத்த வீரர்கள் மட்டும் தான். ரோஹித் சர்மா, மற்றும் ரஹானே இரண்டு இன்னிங்ஸிலும் உடனே தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பலவீனமாக்கியது.

இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் அதிக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்பொழுது, அடுத்த போட்டியில் ரோஹித் மற்றும் ரஹானே இருவரிடமும் உறுதிப்பாட்டை நான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் ஒன்று போட்டியில் வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் அல்லது அணியை காப்பாற்ற வேண்டும். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானேவின் ஆட்டத்தை பார்க்கும் பொழுது அவர் கால்களை நிறுத்திய விதம் சரியாக இல்லை. அந்த சமயத்தில் அவர் தாக்குதலுக்கு தயாராக இருக்கவும் இல்லை. ஆண்டர்சன் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வர் என தெரிந்தும் நீங்கள் அதற்கு தயாராகவில்லை. நிச்சயம் இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே அவுட் ஆன விதம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்றார்.

மறுபக்கம் ரோஹித் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டது குறித்து ஏமாற்றம் அடைந்திருப்பார். அவுட் ஸைடு ஆஃப் ஸ்டெம்பிற்கு குறிவைத்து வீசப்படும் பந்துகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக பந்து வீச்சாளர்கள் உங்களை எங்கு தாக்கப் போகிறார்கள், எது உங்களுடைய பலவீனம் என்பது நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இது போன்ற பந்துகளை ரோஹித் சர்மா இன்னும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் லக்ஷ்மன் கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் மீதம் இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற முயற்சிக்க வேண்டும், குறைந்த பட்சம் 2 போட்டிகளிலாவது கட்டாயம் வெற்றியும் ஒரு போட்டியை டிராவில் முடிக்கவும் செய்தால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதிபெற முடியும். இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version