இந்தியா

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு: வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு

Published

on

மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளூக்கு ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய அரசு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டே இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்பட அனைத்து மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த உத்தரவு ஒன்றையும் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகளுடன் குழு அமைத்து இட ஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மருத்துவ படிப்பிற்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் உள்பட பல முக்கிய வல்லுனர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்ட நிலையில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளி வந்து உள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிஜி மருத்துவம், பல் மருத்துவ படிப்புகள், டிப்ளமா மருத்துவ படிப்புகள் ஆகியவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான உள்ள முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. மேலும் இந்த இட ஒதுக்கீடு முறை 2021 – 22 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக எம்பிபிஎஸ் படிப்பில் 1500 மாணவர்களும் முதுநிலை படிப்பில் 2500 மாணவர்களும் என மொத்தம் 4000 மாணவர்கள் பயன்பெறுவர். அதே போல் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினர் 10 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக பல மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version