தமிழ்நாடு

“ஜெயலலிதாவுக்கு நினைவிடமா? ஊழலின் சின்னமாகவே பார்க்கப்படும்”- வைரலாகும் ராமதாஸின் அறிக்கை

Published

on

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் திறக்கப்பட்டது. இந்த நினைவிடம் குறித்து 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியான போது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அவரின் அறிக்கை தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பட்டு வருகிறது.

ராமதாஸ் 2017ல் அறிக்கை மூலம் கூறியிருப்பதாவது, ‘தமிழக முதலமைச்சர் பதவி வகித்து மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து தியாகியாக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.

நினைவு மண்டபம் எனப்படுவது பொது வாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும், தியாகத் திருவிளக்காகவும் விளங்கியவர்களை போற்றுவதற்காக அமைக்கப்படுவது ஆகும். சிறந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் பார்க்கும் போது, அந்த தலைவர்களைப் போல நாமும் வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகத் தான் நினைவிடங்கள் அமைக்கப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் பட்சத்தில் அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள என்ன இருக்கும்? தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூறை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை குவித்தார் என்பதைத் தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும். வருங்காலத் தலைமுறையினருக்கு அந்தப் பாவம் தேவையில்லை.

எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதை தவிர்ப்பதற்காக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன்’ என்று அறிக்கையில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

தற்போது அதிமுக – பாமக கூட்டணியில் உரசல் போக்கு நிலவி வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணியில் தொடராது என்றும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் ராமதாஸின் பழைய அறிக்கை, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறக்கப்படும் நாளில் சுற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் முழு அறிக்கை:

 

seithichurul

Trending

Exit mobile version