தமிழ்நாடு

அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்களின் போராட்டம்: ரஜினியின் Breaking அறிக்கை!

Published

on

நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க வர முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் நேற்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி, உடல்நல பாதிப்பு காரணமாக அரசியல் கட்சித் தொடங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முன்னதாக ரஜினி வெளியிட்ட அறிக்கையில், ‘என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆஎக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இப்படி தன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாத தெரிவித்தப் பின்னரும், அவரது ரசிகர்களில் ஒரு தரப்பினர், போராட்டம் செய்து வருகின்றனர்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினி, ‘நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொற்றுப்பிலிருந்தும, மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறி விட்டேன்.

தயவுகூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version