சினிமா செய்திகள்

இளையராஜா ஒரு சுயம்பு லிங்கம் – ரஜினிகாந்த் புகழாரம்!

Published

on

இசை ஞானி இளையராஜாவின் 75வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் துவங்கி வைத்தார். இளையராஜாவின் சீடனும் இசைப்புயலுமான ஏ.ஆர். ரஹ்மான், கீபோர்ட் வாசிக்க முதல் நாள் விழாவில் இளையராஜா பாடினார்.

இறுதி நாளான நேற்று, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவுக்கு இசை அருள் தானாகவே உள்ளது. அவர் ஒரு இசை சுயம்பு லிங்கம். இன்றளவும் அவரது இசை உயிர்ப்போடு இருக்கிறது.

80களில் ஒரே நாளில் 3 படங்களுக்கு ஓய்வின்றி ரீ-ரெக்கார்டிங் செய்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் செய்ய ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

தயாரிப்பாளர், இயக்குநர்களின் கஷ்டத்தை தெரிந்து கொண்டு வேலை பார்ப்பவர். அவர் இசையில் தான் என்னை முதன்முதலாக பாட வைத்தார். மன்னன் படத்தில் வரும் அடிக்குது குளிரு பாடலில் உள்ள ஆறு வரிகளை படிக்க, எனக்கு ஆறு மணி நேரம் ஆகிவிட்டது.

ஆனால், எனது படத்தின் பாடல்களை விட கமல்ஹாசனின் படங்களுக்குத் தான் இளையராஜா சிறப்பான பாடல்களை அள்ளிக் கொடுத்தார் எனவும் நடிகர் ரஜினி இளையராஜாவை புகழ்ந்து பேசினார்.

பின்னர் பேசிய கமல், இளையாராஜாவை புகழ்ந்து பேசினர். கமல் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து சில பாடல்களை மேடையில் பாடினர்.

காப்புரிமை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையாராஜாவின் இசை விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version