தமிழ்நாடு

அரசியலில் ரஜினி கெஸ்ட் ரோல் கொடுக்கணும் – வற்புறுத்தும் கராத்தே தியாகராஜன்!

Published

on

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சித் தொடங்குவதை கைவிட்டு விட்டார் நடிகர் ரஜினிகாந்த். இருந்தாலும் அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் தொடர்ந்து அவரது அரசியல் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கராத்தே தியாகராஜன், ‘சினிமாவில் கொடுப்பது போல ரஜினி, அரசியலிலும் கெஸ்ட் ரோல் கொடுக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த ஜூன் மாதம் நீக்கப்பட்டார் கராத்தே தியாகராஜன். அதன் பின்னர் ரஜினிக்குச் சாதகமான அரசியல் கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார். எப்படியும் ரஜினி கட்சி ஆரம்பித்ததும், அதில் முக்கிய பொறுப்பு தியாகராஜனுக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் இருந்து பின் வாங்கினார் ரஜினி. இதனால் தற்போது தன் அடுத்த அரசியல் மூவ் குறித்து ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார் தியாகராஜன்.

இந்நிலையில் அவர் ரஜினிக்கு ஒரு வற்புறுத்தலை முன் வைத்துள்ளார். ‘சூப்பர்ஸ்டார் அண்ணன் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அரசியலுக்கு வர முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன். அவர் மனம் புண்படும்படி எதுவும் பேசக்கூடாது தான். அதே நேரத்தில் அவரது ரசிகர்கள் மனமும் புண்படாதபடி அவரும் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்.

சினிமாவில் எப்படி கெஸ்ட் ரோல் இருக்கிறதோ, அதைப் போல அரசியலிலும் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் ரஜினி. அதன் மூலம் தன் தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு நல்ல வழியை அவரால் காண்பிக்க முடியும். இது அவருக்கு நான் வைக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்’ எனப் பேசியுள்ளார் தியாகராஜன்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version