கிரிக்கெட்

32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை மீண்டும் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது.

ராஜஸ்தான் அதிரடி ஆட்டம்

ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இணைந்து ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியில் இறங்கிய ஜெய்ஸ்வால் 26 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 86 ரன்களைச் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாம்சன் 17 ரன், ஜெய்ஸ்வால் 77 ரன்கள் விளாசி தேஷ்பாண்டே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 8 ரன்கள் எடுத்து வெளியேற, ராஜஸ்தான் 146 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது.

இந்த நிலையில், ஜுரெல் மற்றும் படிக்கல் இணைந்து 5வது விக்கெட்டுக்கு பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க விட்டு ராஜஸ்தான் ஸ்கோரை உயர்த்தினர். ஜுரெல் 34 ரன் விளாசி ரன் அவுட்டானார். ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. படிக்கல் 27 ரன்கள், அஷ்வின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் தேஷ்பாண்டே 2, தீகஷனா, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் வெற்றி

அடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்து, 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஷிவம் துபே அதிகபட்சமாக 52 ரன்ளும், ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன்களும் எடுத்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆடம் சம்பா 3 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட் மற்றும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ராஜஸ்தான் 8 போட்டியில் விளையாடி 5வது வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version