இந்தியா

புதிய வகை கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு – உஷார் மோடில் ராஜஸ்தான்!

Published

on

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், அங்கே பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடு சென்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அந்தந்த நாடுகளை பெரும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு, இதே சூழலில் இப்படித்தான் சீனாவில் இருந்து உலகின் இதர நாடுகளுக்கு சென்றவர்கள் வாயிலாக கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டுவித்தது. இப்போது இந்த புதிய வகை கொரோனா, இங்கிலாந்தில் இருந்து கிளம்பியிருக்கிறது.

குறிப்பாக, லண்டனில் இருந்து சென்னை வந்த சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு அடுத்தடுத்து வருவதால், மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க, நாடு முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version