தமிழ்நாடு

அதிமுகவில் உருவானது கலகம்: பிடிகொடுக்காமல் பேசும் ராஜன் செல்லப்பா!

Published

on

அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என மதுரை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை பொதுக்குழுவில் முன்வைக்கவுள்ளோம். இதனை உட்கட்சிப் பூசல் என்று கருதக்கூடாது. பொதுக்குழுவில் முன்வைக்க வேண்டிய பிரச்சினை இது. பொதுக்குழு கூட்டப்படாததால் ஊடகங்கள் வாயிலாக இதனை முன்வைத்துள்ளேன்.

திறமையான, சுயநலமற்ற மக்கள் பணியாற்றக் கூடிய ஒருவரை அதிமுகவிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார் ராஜன் செல்லப்பா. இதனையடுத்து செய்தியாளர்கள், ஜெயலலிதா இருந்தபோது அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்தார். அதுபோல முதல்வரே பொதுச்செயலாளர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், இதுகுறித்து பொதுக்குழுவில் தெரிவிப்போம். அதிகாரம் படைத்தவர், கட்சியைக் கட்டுக்கோப்புடன் நடத்துகிறவர் முதல்வராக இருந்தாலும், முதல்வராக இல்லாமல் இருந்தாலும் தவறு கிடையாது. அது யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. இரு தலைமையின் கீழ் செயல்படுவதால் நாங்கள் உடனுக்குடன் உரிய முடிவு எடுக்கமுடிவதில்லை என்றார்.

இதனையடுத்து, இருவரில் ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்கிறீர்களா அல்லது புதியவர் வரவேண்டும் என்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு மக்கள் சக்தி படைத்தவர், ஜெயலலிதாவால் கொஞ்ச நாள் அங்கீகரிப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும். எடப்பாடி, பன்னீர் இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிப்பட்டவர்கள்தான். அதில் யார் சிறந்தவர்கள் என்று பார்க்கலாம். அல்லது புதியவர் யாராக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்.

இருவரும் ஒன்றுசேர்ந்து அம்மா நினைத்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். எங்களின் தேவை ஈர்ப்பு சக்தியுள்ள ஒரே தலைமை. இதனை என்னுடைய முதல் குரலாக எடுத்துக்கொள்ளலாம் என ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version