தமிழ்நாடு

அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி!

Published

on

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு நகை கடன் கொடுத்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வுகளும் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூட்டுறவு சங்க மாநில தலைவர் இளங்கோவன் அவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இருபத்தி ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி சேலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் இளங்கோவன் என்பதும் அவர் வீட்டிலேயே சோதனை நடைபெற்று வருவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த இளங்கோவன், சுமார் 4 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்தே சேலத்தில் உள்ள இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி உள்பட 4 முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் போலீசார் சோதனை நடத்திய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நெருக்கமானவரான இளங்கோவன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version