இந்தியா

தமிழகத்தில் போட்டியிட உள்ள ராகுல் காந்தி: குறிவைக்கப்படும் கன்னியாகுமரி தொகுதி!

Published

on

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்க இருக்கும் முதல் மக்களவை தேர்தல் இது. பிரதமர் மோடி மீது நாடு முழுவதும் அதிருப்தியும், ஆதரவும் கலந்து இருப்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. புதிய தலைமையின் கீழ் செயல்படும் காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

அதில் ஒன்றாக நாடுமுழுவதையும் இணைக்கும் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக வடக்கே அமேதி தொகுதியிலும், தெற்கே கன்னியாகுமரி தொகுதியிலும் ராகுல் காந்தி களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக விருதுநகரில் தோற்ற காமராஜரை ஜெயிக்க வைத்து மக்களவைக்கு அனுப்பிய வரலாறு கன்னியாகுமரி தொகுதிக்கு உண்டு.

இந்த வரலாற்றை எடுத்துச் சொல்லி ராகுல் காந்தியை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த கன்னியாகுமரி தொகுதியின் தற்போதையை எம்பியாக உள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலின் போது மத்திய, மாநில அரசுகள் மீது தங்களை முறையாக கவனிக்கவில்லை என்ற அதிருப்தியில் மக்கள் உள்ளனர். அதே நேரத்தில் ஓகி புயலின்போது ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டம் வந்து மீனவர்களை எல்லாம் தேடித் தேடி சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version