இந்தியா

கோவா முதல்வர் பாரிக்கருக்கு ராகுல் காந்தி அதிரடி பதில் கடிதம்!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தார். அப்போது திடீரென கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கொச்சினில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என பாரிக்கர் கூறியதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ராகுலுக்கு கடிதம் எழுதிய மனோகர் பாரிக்கர், என்னுடனான சந்திப்பை நீங்கள் அற்ப அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டீர்கள் என்பது வருத்தமாக உள்ளது. என்னைச் சந்தித்த 5 நிமிடங்களில் ரஃபேல் குறித்து உங்களுடன் எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாக இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராகுல் காந்தி கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு அதிரடி பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் என்னை அமைதியிழக்கச் செய்தது. உங்களுடனான என்னுடைய சந்திப்பு முற்றிலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பே. நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். உங்களுடனான சந்திப்பின் நாம் பேசியது குறித்து எந்தச் செய்தியையும் நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. சந்திப்புக்குப் பின்னர் நான் ஆற்றிய இரண்டு உரைகளும், இதற்கு முன்பாக பொதுவெளியில் முன்வைக்கப்பட்ட தகவல்களே என்றார்.

மேலும், உங்களின் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கோவாவில் நடந்த நம்முடைய சந்திப்புக்குப் பிறகு, உங்களுக்கு கடுமையான அழுத்தம் வந்துள்ளதாக தெரிகிறது. எனவே என்னை முறையற்ற வகையில் தாக்குவதன் மூலம் பிரதமர் மீதான உங்களுடைய விசுவாசத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற பரிமாற்றங்களில் நான் ஈடுபடுவதில்லை உங்களின் கடிதம் வெளியாகி தேவையற்ற சர்ச்சையானதால், என் நிலையைப் பகிரவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன் என்றார் ராகுல் காந்தி.

seithichurul

Trending

Exit mobile version