தமிழ்நாடு

‘அண்ணா… அண்ணா…’ என ஓடி வந்த இளம் பெண்ணுடன் போட்டோ எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி; வைரல் வீடியோ!

Published

on

புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் பரபரப்புகள் நிலவி வரும் நிலையில், நேற்று அங்கு வந்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ராகுல் காந்தி.

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து வருவதால் அங்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழும் நிலையில் உள்ளது.

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த தீப்பாயந்தானும் சில நாட்களுக்கு முன்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். அதேபோல ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், தன்னுடைய பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து காமராஜர் நகரின் எம்.எல்.ஏ-வான ஜான்குமாரும் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். அவர்களது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாக புதுச்சேரியின் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்து விட்டார்.

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் இருக்கின்றன. 3 நியமன எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். இதன்படி புதுவை சட்டப்பேரவையின் மொத்த பலம் 33 ஆகும். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களை வென்றது. பின்னர் திமுகவின் 3 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும், சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவையும் பெற்று நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக, நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. குறிப்பாக புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் நாராயணசாமிக்கும் தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் கிரண்பேடியை நேற்று முன் தினம் திடீரென்று பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இப்படியான சூழலில்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலர் அடுத்தடுத்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தற்போது புதுவை சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. இதில் 14 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் புதுவை அரசு கவிழும் அபாயத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் முதல்வர் நாராயணசாமியைப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, ‘எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி பலமாக இருக்கும் காரணத்தினால் ராஜினாமா என்ற பேச்சுக்கு இடமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி வந்த ராகுல், பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘அரசியலில் எனக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை நண்பராக கருதாவிட்டாலும் அவர்களும் எனக்கு உற்ற தோழர்கள் தான். என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால், அவரை கொன்றவர்கள் மீது எனக்கு எந்த கோவமும், வெறுப்பும் இல்லை. அவர்களை மன்னித்து விட்டேன்.

ஒரு சில பணக்காரர்கள் தான் கடலை ஆள வேண்டும் என மோடி நினைக்கிறார். ஆனால் லட்சக்கணக்கான நமது மீனவர்கள் தான் அந்த கடலை ஆள வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பதை பேச இங்கே வரவில்லை. உங்கள் கருத்தை கேட்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலில் ராகுல் ஈடுபட்ட போது, அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள பல்வேறு மாணவிகள் விருப்பப்பட்டனர். ஒரு மாணவி, ‘ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா’ என மேடைக்கு அருகிலேயே வந்து விட்டார். மிகவும் உற்சாக மிகுதியுடன் ஓடி வந்த அந்த மாணவியை ஆற்றுப்படுத்திய ராகுல், அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு, தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version