இந்தியா

ராகுல் காந்தி சிறை செல்லத் தேவையில்லை: சூரத் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published

on

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதில் முக்கியமான சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Rahul in Surat 1

2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து நேற்று ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், வரும் 10-ஆம் தேதி ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவடையும் வரை பிணை அமலில் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் ராகுல் சிறை செல்லத் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையும் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் வரை நிலுவையில் இருக்கும். ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற உள்ள மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version