தமிழ்நாடு

ஒரே நாளில் தமிழகம் வரும் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்தி – பொங்கலன்று மல்லுக்கட்ட போகும் காங். – பாஜக!

Published

on

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி ஆகிய இருவரும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஜனவரி 14 ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. யார் தங்கள் தலைவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப் போகிறார் என்பதில், காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, வரும் ஜனவரி 14 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வந்தது. ‘துக்கள்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வருவார் என்று சொல்லப்பட்டது. இப்படி அவர் சென்னைக்கு வரும் பட்சத்தில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது வருகை சில காரணங்களால் ரத்தானது. இதைத் தொடர்ந்து அமித்ஷாவுக்கு பதிலாக ஜெ.பி.நட்டா துக்ளக் விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை துக்ளக் ஆசிரியரான, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியே உறுதி செய்தார்.

அவர், ‘14.1.2021 துக்ளக் ஆண்டு விழா. தவிர்க்க முடியாத காரணங்களால் அமித் ஷா பங்கேற்கவில்லை.பாஜக அகில இந்திய தலைவர் நட்டா பங்கேற்பார். மற்ற கட்சி தலைவர்களும் பேச அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். விழா கலைவாணர் அரங்கில் நடைபெறும். நேரம் மாலை 6:30 முதல் 8:30 மணி வரை விழா நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார். அமித்ஷா இடத்திலிருந்து அவர் செய்ய வேண்டிய பணிகளை நட்டா செய்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்படைந்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை, பொங்கல் விழாவை தமிழர்களுடன் கொண்டாட ராகுல் காந்தி, அதே 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ராகுல் காந்தி நேரில் பார்ப்பார் என்றும், பின்னர் காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து ராகுல் காந்தி, பொங்கல் விழாவையும் கொண்டாட உள்ளார் என்றும் கூறப்பட்டது. இதனால் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

இப்படி நாட்டின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் ஒரே நாளில் தமிழகம் வர உள்ளது பல்வேறு யுகங்களுக்கு வழிவகுத்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இரு தலைவர்களின் வருகை முக்கியமானதாக மாறியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version