இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டது உண்மையே: சிக்கியது ஆதாரம்!

Published

on

ரஃபேல் போர்விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரதமர் மோடியையும், பாஜகவையும் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஃபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில், ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் விமானப் படைப் பிரிவின் துணைத் தலைவரான ஏர் மார்ஷல் சின்ஹா தலைமையிலான ஏழுபேர் கொண்ட குழு பேச்சு நடத்தியது. அதில் எந்த விதத்திலும் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

மேலும் ரஃபேல் விமான இறக்குமதியில் எந்தத் தலையீடும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், பாதுகாப்புத் துறைக்குள் நிகழ்ந்துள்ள கடிதப் பரிமாற்றங்கள் இதில் பிரதமர் அலுவலகத் தலையீடு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

மூத்த பத்திரிகையாளரும், தி இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம் இதற்கான ஆவணங்களை அம்பலபடுத்தியிருக்கிறார். தி இந்து இதனை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் நமது அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தையை தாழ்த்தும் வகையில் அது அமைந்துவிடும் என்று 2015 நவம்பர் 24-ம் தேதி அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் தன் கைப்பட எழுதிய அலுவலகக் குறிப்பினை வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஃபேல் விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தை பிரதமர் அலுவலகம் மூலமாக நடத்தப்படுகிறது என்ற தகவலே பிரான்ஸ் குழுவிடம் இருந்துதான் கிடைத்திருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த ஆதாரங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக வலுவாக அமைந்துள்ளது.

Trending

Exit mobile version