தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு!

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் கவுரவமான இடங்களை ஒதுக்க முன்வரும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோருடன் கூட்டணி வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

ஒருவேளை இந்த இரண்டும் நிறைவேறாவிட்டால், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வாழும் தென்காசி, நெல்லை உள்பட 20 மக்களவை தொகுதிகளிலும், ஒட்டப்பிடாரம் உள்பட 12 சட்டப்பேரவை தொகுகளிலும் அரசியல் இயக்கங்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க குழு அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

இந்த சந்திப்பில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து புதிய தமிழகம் கட்சிக்கு தொன்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும். மேலும் 21 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு, புதிய தமிழகம் கட்சி ஆதரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version