தமிழ்நாடு

‘பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்’- தொண்டர்களுக்கு திமுக தலைமை கறார் உத்தரவு!!!

Published

on

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள். மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி அவர், ‘பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் – கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில் – “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்” என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் கழகத்தினர் அனைவரும் அறிவீர்கள்.

அதன்பிறகு, கழகத்தினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

ஆகவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று கழகத்தினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version