விமர்சனம்

இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்

Published

on

ஊருக்குள் அடிதடி செய்துகொண்டு வேலை வெட்டி இல்லாமல் முடி வெட்டக் கூட நேரம் இல்லாமல் சுற்றித்திரிகிறார் கதாநாயகன் புலிக்குத்தி பாண்டி (விக்ரம் பிரபு). அப்பாவி அப்பா மற்றும் குடிகார, சூதாடியாக திரியும் இரண்டு அண்ணன்களின் பாவப்பட்ட குடும்பத்தை தன் சொந்த உழைப்பால் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறார் பேச்சியம்மாள் (லட்சுமி மேனன்).

ஊருக்குள் வட்டிக்கு விடுவது… வட்டிக்குப் பதில் சொத்தை அல்லது வட்டிக்கு வாங்கியவர்களின் குடும்ப பெண்களை எழுதி வாங்குவது… இல்லை என்றால் தன் சின்ன மகன் சரவெடி (ஆர்.கே.சுரேஷ்) மூலம் அவர்களை கழுத்திலேயே வெட்டுவது, அவனை காப்பாற்ற தன் அடுத்த மகன் டிஎஸ்பி சங்கையாவை (அருள் தாஸ்) பயன்படுத்துவது என வாழ்ந்து வருகிறார் சன்னாசி (வேல ராமமூர்த்தி). இந்த மூன்று வித்தியாசமான குடும்பங்கள் ஒரு மையத்தில் இணைகின்றன. ஏன்… எதற்காக… எப்படி என்பதை 500 டெசிபல் சத்தத்திலும் 1,000 லிட்டர் ரத்தத்திலும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த புலிக்குத்தி பாண்டி…

முந்தைய முத்தையா படங்களுக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை கடைசியில் சொல்கிறேன்.

தன்னுடைய படங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை மையமிட்டதாகத்தான் இருக்கும் என்று முத்தையா முன்னரே சொல்லிவிட்டதால் அதைப் பற்றியும் இங்கே இனி சொல்லப்போவதுமில்லை.

 

புலிக்குத்தி பாண்டியாக விக்ரம் பிரபு. பாதி முகத்தை தாடியும் தலை முடியும் மறைத்துக்கொள்ள மீதம் இருக்கும் கொஞ்சூண்டு இடத்தில் உணர்ச்சிகளை காட்ட முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி முத்தையாவின் வழக்கமான ஹீரோதான் இந்த புலிக்குத்தி பாண்டி. எந்த வித்தியாசமும் இல்லை. அதே போலத்தான் நாயகி லட்சுமி மேனன் கதாபாத்திரமும் மற்ற துணை கதாபாத்திரங்களையும் எழுதியிருக்கிறார்.

வில்லனாக சன்னாசி. ஊர்க்கார வில்லன் என்றாலே வேலராமமூர்த்தி, அருள் தாஸ், ஆர்.கே.சுரேஷ்-ஐ முதல்ல புக் பண்ணுங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு உருவாகிவிட்டார்கள். ஒரே பெண்ணுடன் குடும்பமே உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக எழுதியிருக்கிறார்.

Also Read: விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்

கதைக்களம், நடிகர்கள், கதை, வசனம், பாடல்கள் என அனைத்தும் தன்னுடைய முதல்படத்தில் இருந்தது போலவே அமைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

என்.ஆர்.ரகுநாதனின் இசையிலும் எந்த புதுமையும் இல்லை. கரிசல்காட்டு சாலைகளை, ஊர்களை வேல்ராஜ் கொஞ்சமேனும் அழகாக காட்டியிருக்கிறார்.

என்னடா தொடர்ந்து முத்தையாவை பற்றியே பேசியிட்டுருக்கீங்கன்னு கேட்கிறீங்களா? ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் இருக்கிறது என்பது இயக்குநர் கையில் தான் இருக்கிறது. சில படங்களில் கதை நன்றாக இருந்து நடிகர்கள் சொதப்பிவிடுவார்கள். அது ரொம்பவே குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் முத்தையா சொன்னதை நடிகர்கள் உண்மையில் கட்சிதமாகவே செய்திருக்கிறார்கள்.

ஒரே மாதிரியான படங்கள் தான் என்றாலும் சி சென்டர் ஆடியன்ஸை முத்தையா எப்போதும் திருப்தி செய்து விடுகிறார். புலிக்குத்தி பாண்டியிலும் சாத்தியம் ஆகியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் புலிக்குத்தி பாண்டிக்கு வந்த பார்வையே சாட்சி.

ஹீரோவை பழிவாங்க அவனது குடும்பத்தை பழிவாங்கும் வில்லனை பழிவாங்குவான் ஹீரோ. ஆனால், இந்த படத்தில் வில்லன் ஹீரோவை கொலை செய்துவிட வில்லனை குடும்பமே சேர்ந்து பழிவாங்கும் படி செய்திருக்கிறார் முத்தையா… (எப்புடி… கதையில் செம்ம வித்யாசம்ல)

seithichurul

Trending

Exit mobile version