தமிழ்நாடு

புதுவை முதல்வரைப் பற்றி ராகுலிடம் புகார் சொன்ன பெண்; பிளேட்டை மாற்றிப் போட்ட நாராயணசாமி #Viral

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று புதுச்சேரி வந்திருந்தார். இன்னும் ஒரு சில மாதங்களில் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்த ராகுல் காந்தி, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்படி மீனவ சமூக மக்களுடன் ராகுல் கலந்துரையாடிய போது, ஒரு பெண் முதல்வர் நாராயணசாமி குறித்துப் புகார் கூறுகிறார். அதை நாராயணசாமி ராகுலுக்கு மொழிப்பெயர்த்து சொல்லும் போது, அப்படியே மாற்றிக் கூறி விட்டார். இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, புதுச்சேரி மாநிலத்தில் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து வருவதால் அங்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழும் நிலையில் உள்ளது.

தற்போது புதுவை சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. இதில் 14 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் புதுவை அரசு கவிழும் அபாயத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் முதல்வர் நாராயணசாமியைப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, ‘எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி பலமாக இருக்கும் காரணத்தினால் ராஜினாமா என்ற பேச்சுக்கு இடமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீனவ சமூக மக்களுடன் ராகுல் உரையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண், ‘கடலோரப் பகுதி பல ஆண்டுகளாக இப்படியே தான் இருக்கிறது. எங்களுக்கு யாரும் ஆதரவு கொடுக்க மறுக்கிறார்கள். முதல்வரே பக்கத்தில் இருக்கிறாரே, அவர் ஒரு முறையாவது புயல் சமயத்தில் வந்து எங்களைப் பார்த்திருக்கிறாரா?’ எனக் கேள்வி எழுப்புகிறார்.

இதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ராகுலுக்கு சொன்ன நாராயணசாமி, ‘புயல் சமயத்தின் போது, நான் இங்கு வந்து பாதித்த இடங்களைப் பார்த்தேன். நிவாரணங்கள் வழங்கினேன். அதைத் தான் அவர் சொல்கிறார்’ என்று மாற்றி சொல்லி விட்டார். இது கடும் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகி இருக்கிறது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version