தமிழ்நாடு

புதுச்சேரியில் தப்புமா காங். அரசு? – இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Published

on

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வாக்கெடுப்பில் புதுவை அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், நாராயணசாமியின் ஆட்சி கவிழும். புதுச்சேரியில் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு சென்ற வாரம் தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியும் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி ஆளுநராக அவர் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

தற்போது புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததே அரசியல் குழப்பத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த தீப்பாயந்தானும் சில நாட்களுக்கு முன்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். அதேபோல ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், தன்னுடைய பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து காமராஜர் நகரின் எம்.எல்.ஏ-வான ஜான்குமாரும் தன் பதவியை ராஜினாமா செய்வதாக சென்ற வாரம் அறிவித்தார். அவர்களது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாக புதுச்சேரியின் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்து விட்டார்.

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் இருக்கின்றன. 3 நியமன எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். இதன்படி புதுவை சட்டப்பேரவையின் மொத்த பலம் 33 ஆகும். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களை வென்றது. பின்னர் திமுகவின் 3 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும், சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவையும் பெற்று நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

தற்போது புதுவை சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. இதில் 14 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் புதுவை அரசு கவிழும் அபாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில் வரும் 22 ஆம் தேதிக்குள் புதுச்சேரி அரசு, தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை, முன்னதாக கெடு விதித்திருந்தார். அதன்படி இன்று புதுவை அரசு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

 

seithichurul

Trending

Exit mobile version