தமிழ்நாடு

புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா; பாஜகவில் இணைகிறாரா?

Published

on

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சமீபத்தில் கவிழ்ந்த நிலையில் தற்போது புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தபோது நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க கூடாது என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்த கோரிக்கையை சபாநாயகர் சிவக்கொழுந்து நிராகரித்ததை அடுத்து நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.

திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் புதுவையில் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவைக்கு வருகை தந்திருந்த போது சபாநாயகர் சிவக்கொழுந்து அவர்களின் மகன் மற்றும் சகோதரர் பாஜகவில் இணைந்தனர்

இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் சிவக்கொழுந்து துணை நிலை ஆளுனரிடம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். ராஜினாமாவை அடுத்து சிவக்கொழுந்து அவர்களும் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் புதுவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Trending

Exit mobile version