சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கமும், நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் இணைகிறதா?

Published

on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டது என்பதும், பாரதிராஜா அதற்கு தலைமை தாங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைய இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். அப்போது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர் கூறியதாகவும், அதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் பிரிந்து இருப்பதால் அவை எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தால் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் இதனை அடுத்து நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைவதாக வெளிவந்திருக்கும் செய்திகள் தவறானவை என்றும் நாங்கள் தொடர்ந்து தனித்து செயல்படுவோம் என்றும் அதே சமயம் திரைத்துறையில் ஏதாவது பிரச்சனை என்றால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரண்டு சங்கங்கள் போக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் கில்டு மற்றும் டி ராஜேந்தரின் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை தனித்தனியாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version