இந்தியா

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்: அரசாணை வெளியீடு!

Published

on

முத்தலாக் தடைச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தற்போது இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேராமல் போனதால் தற்போது இதனை மீண்டும் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஆனால் இந்த சட்டம் இஸ்லாத்தின் ஷரியத் விவகாரத்தில் தலையிடுகிறது என கடுமையாக இஸ்லாமிய அமைப்புகள், எதிர் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஆனால் அத்தனை எதிர்ப்பையும் மீறி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு.

மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிய பாஜக இதனை மாநிலங்களவையில் நிறைவேற்ற சற்று சிரமப்பட்டது. சில கட்சிகளுடன் பேசி ஒரு வழியாக இதனை மாநிலங்களவையில் நிறைவேற்றினர். மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பின் போது ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பெற்று நிறைவேறியது. அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தது இந்த மசோத நிறைவேற வசதியாக அமைந்தது.

இதனையடுத்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த முத்தலாக் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Trending

Exit mobile version