தமிழ்நாடு

நீ, வா, போ என ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்: ஓரு அரசியல் தலைவருக்கு இது அழகா?

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு கூட்டணி அமைக்க தேமுதிகவானது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது திமுக பொருளாளர் துரைமுருகன் மூலமாக அம்பலமானது. இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெருத்த அவமானமாக அமைந்துள்ளது. இதனால் தேமுதிக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக தலைவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் பிரேமலதாவிடம் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவர் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் ஒருமையில் பேச ஆரம்பித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு ‘நீ எந்த தொலைக்காட்சி’ என பதில் கேள்வி கேட்டுவிட்டு பதில் அளித்தார்.

கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் செய்தியாளரை பார்த்து ‘நீ போய் கேளு’ என கூறினார். மேலும் கொள்கை தொடர்பான கேள்விக்கு, ‘ கொள்கை இல்லை என உனக்கு யார் சொன்னது?’ என தொடர்ந்து ஒருமையில் பேசினார். கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிட எதற்கு இவ்வளவு இழுபறி என கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், ‘செய்தியாளர்கள் 24 மணிநேரமும் தேமுதிக அலுவலக வாசலில் நிப்பீங்க, நாங்கள் பதில் சொல்லணுமா?’ என்று எதிர்கேள்வி கேட்டார்.

தொடர்ந்து பிரேமலதா செய்தியாளர்களை ஒருமையில் பேசியதால் பிரேமலதாவுக்கு செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரேமலதாவின் இந்த அனுகுமுறைக்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version