தமிழ்நாடு

‘அண்ணே… உங்களுக்குப் பக்குவம் பத்தாதுண்ணே’- எடப்பாடியாரை நக்கல் செய்த அண்ணியார்!

Published

on

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது. இந்நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்த ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார் தேமுகித பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

‘அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இறுதியாக நாங்கள் 18 இடங்களைக் கேட்டோம். ஆனால் அவர்கள் தரப்பில் 13 இடங்கள் மட்டுமே தரப்படும் என்றார்கள். சரி, போட்டியிடும் இடங்களையாவது எங்களுக்கு முன்கூட்டியே தெரிவியுங்கள். அப்போது தான் தேர்தலுக்கு எங்களால் தயாராக முடியும் என்றோம். அதையும் சொல்லவில்லை. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் தான் தெரிவிப்போம் என்றார்கள். நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இது தான் நடந்தது. இப்போதும் அப்படித் தான் எங்களை மரியாதை குறைவாக நடத்தினார்கள். இந்தக் காரணத்தினாலேயே கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறினோம்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கி அரவணைத்துக் கொண்டார். அந்தப் பக்குவம் அவரிடத்தில் இருந்தது. அதே பக்குவம் அண்ணன் எடப்பாடியாரிடம் இல்லை என்பது தான் எனது கருத்து’ என்று அதிரடியாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி என்பது இருக்கிறது. அதற்குத் தகுந்தாற் போலத் தான் இடங்களை ஒதுக்க முடியும். தேமுதிகவை நாங்கள் மரியாதையோடு தான் நடத்தினோம். அவர்கள் தான் பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version