தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு: தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்!

Published

on

சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக பலரும் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தில் தமிழக அரசின் சார்பில் பொங்கல் செய்வதற்கு உண்டான பொருள்கள் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூபாய் 2500 ரொக்க பணமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரொக்கப்பணம் வழங்காமல் வெறும் பரிசுப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்த நிலையில் அவ்வாறு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்களும் தரமற்றதாக இருந்ததாக கூறப்பட்டது.

புளியில் பல்லி இருந்ததாகவும் மஞ்சள் தூளில் மரத்தூள் கலப்படம் செய்துள்ளதாகவும் அனைத்து பொருட்களுமே தரமற்றதாக இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தது என்பதும் தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களை வாங்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசு பொருட்கள் விஷயத்தில் தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் பொங்கல் பரிசு தொகுப்பு காண பொருள்களை தரத்தை உறுதி செய்வதில் மெத்தனமாக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஒட்டுமொத்த பொங்கல் பரிசு பொருட்களின் தரம் குறைவாக இருந்ததற்கு ஒரு அதிகாரியை மட்டுமே பலிகடா ஆக்குவதில் நியாயமில்லை என்றும் இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது பொதுமக்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version