தமிழ்நாடு

‘சசிகலா வருகை எழுச்சியாக இருக்கிறது!’ – தனி ரூட்டில் பொன்னார்; கடுப்பில் பாஜக

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில் தொடங்கிய இந்த வரவேற்பானது, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு சசிகலா வரும் வரை தொடர்ந்தது. அவருக்கு சுமார் 22 மணி நேரம் தொடர் வரவேற்பு கொடுத்தனர் ஆதரவாளர்கள். சசிகலாவின் இந்த மாஸ் கம்-பேக் தமிழக அரசியல் தளத்தில் முக்கியப் பேசு பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக அவர், ‘தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ எனத் தெரிவித்துள்ளதால், சசிகலாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாகப் போகிறது என்றே கருதப்படுகிறது.

அவரது வருகை குறித்துப் பல்வேறு விமர்சனங்களை பாஜக தரப்பு வைத்து வரும் நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன், சசிகலா வருகையைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

‘1970 ஆம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் பொதுக் கூட்டங்கள் நடந்த போது நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அப்போது மக்கள் திரட்சி மிக அதிகமாக இருந்தது. அதைப் போல தற்போது சசிகலாவுக்கு மக்கள் திரட்சி இருந்தது.

சசிகலாவின் வருகை மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது. இது அவரின் கட்சியினருக்கு மிகப் பெரிய பலனைத் தரக்கூடும்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜக, ‘சசிகலா வருகையால் எங்களுக்கோ, எங்கள் கூட்டணிக்கோ எந்த வித பாதிப்பும் இல்லை’ என்று தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், பொன்னார் அதற்கு நேர் எதிரான நிலைப்பாடு எடுத்து கருத்துக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version