கிரிக்கெட்

6 பந்தில் 6 சிக்ஸர்கள்: பொளந்து கட்டிய பொல்லார்டு!

Published

on

ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்துள்ள நிலையில் தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் பொல்லார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை செய்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை டாஸ் வென்று முதலில் பந்து வீசியது.

இந்த போட்டியில் இலங்கை அணி சுமாராக விளையாடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் 4வது ஓவரை வீசிய இலங்கை அணியின் தனஞ்சய அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி நிலை குலைந்தது.

இந்த நிலையில் கேப்டன் பொல்லார்டு அதிரடியாக களம் இறங்கி ஹாட்ரிக் விக்கெட்டுக்களை வீழ்த்திய தனஞ்சய வீசிய அடுத்த ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து தெறிக்கவிட்டார் இதனை அடுத்து 13.1 ஓவர்களிலேயே 134 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் பொல்லார்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் ஒருவரின் அடுத்த ஓவரிலேயே ஆறு சிக்சர் அடித்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

ஹாட்ரிக் விக்கெட் செய்த சாதனையை அடுத்து 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் கொடுத்து மோசமான சாதனையையும் இலங்கை வீரர் தனஞ்சய செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version