தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு!

Published

on

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் தன் மீது அவதூறு பரப்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சபரீசன் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகளிடம் சமூக வலைதளங்கள் மூலம் அன்பாக பழகி அவர்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து கூட்டு பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து மேலும், மேலும் மிரட்டி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனை ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது, இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கு தொடர்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த விளக்கத்தில், இந்த சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததே தான்தான், தனக்கோ தன் குடும்பத்துக்கோ இதில் எவ்வித சம்பந்தமுமில்லை, ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

இதனைதொடர்ந்து அவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதத்தில் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சபரீசனுக்கு எதிராக அவர் கூறியுள்ளார். இந்தப் புகாரை சைபர் க்ரைம் போலீசுக்கு டிஜிபி அலுவலகம் அனுப்பி வைத்ததின்பேரில் சபரீசன் மீது நேற்று சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டால் சபரீசன் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version