தமிழ்நாடு

அமைச்சர் வேலுமணி, நிதின் கட்கரியுடன் ‘பொள்ளாச்சி வழக்கில்’ கைதான அதிமுக பிரிமுகர்; படங்கள் வைரல்

Published

on

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில், இன்று காலை மூன்று பேரை கைது செய்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ. இதில் அதிமுக நிர்வாகி ஒருவரும் அடங்குவார். இந்த விஷயம் கடும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கைதான அதிமுக நிர்வாகி, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்தான சில வீடியோக்கள் வெளிவந்து, பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தது. இது குறித்த வழக்கை சிபிஐ அமைப்பு விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று சிபிஐ தரப்பு, இந்த வழக்கில் சம்பந்தம் உடையவர்களாக கருதி மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளது. அருளானந்தம், பைக் பாபு மற்றும் கெரோன்பவுல் என்பவர்களைத்தான் சிபிஐ, தற்போது கைது செய்துள்ளது. இதில் அருளானந்தம் அதிமுக பிரமுகர் ஆவார். இந்த சம்பவத்திற்கும் அதிமுக தரப்புக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதிமுக தரப்பு, பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தத்தை அந்த பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது. இவர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்துக்குப் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அவருக்கு மேடையில் பூங்கொத்துக் கொடுத்துள்ளார் அருளானந்தம். இந்த சந்திப்பின் போதும் வேலுமணி, அருகில்தான் இருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version