தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உட்பட மேலும் மூவர் கைது!- சிபிஐ அதிரடி

Published

on

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்தான சில வீடியோக்கள் வெளிவந்து, பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தது. இது குறித்து தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. பின்னர் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தங்கள் காரணமாக வழக்கு விசாரணை சிபிஐ தரப்புக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோர் முதலில் கைது செய்யப்பட்டனர். கடந்த பல மாதங்களாக சிபிஐ, வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று சிபிஐ தரப்பு, இந்த வழக்கில் சம்பந்தம் உடையவர்களாக கருதி மூன்று பேரை கைது செய்துள்ளது. அருளானந்தம், பைக் பாபு மற்றும் கெரோன்பவுல் என்பவர்களைத்தான் சிபிஐ, தற்போது கைது செய்துள்ளது. இதில் அருளானந்தம் அதிமுக பிரமுகர் ஆவார். இந்த சம்பவத்திற்கும் அதிமுக தரப்புக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது நடவடிக்கை குறித்து திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அதிமுகவின் மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக தரப்பு, பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தத்தை அந்த பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version