தமிழ்நாடு

டெல்லி புறக்கணிப்புக்கு பொங்கிய தமிழக அரசு இதை செய்வது நியாயமா? அணிவகுப்பு குறித்து ராமதாஸ்!

Published

on

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக தலைவர்கள் புறக்கணிப்புக்கு பொங்கிய தமிழக அரசு, வட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை புறக்கணிக்கலாமா? என்ற கேள்வியை பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராம்தாஸ் எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வஉசி, வேலுநாச்சியார், பாரதியார் உள்பட ஒரு சிலரின் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வட தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது!

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!

தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version