தமிழ்நாடு

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் கலகம்: குட் பை சொன்ன இளைஞரணி செயலாளர்!

Published

on

வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை பாமக, அதிமுக கூட்டணியுடன் சந்திக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இது பாமகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இந்த கூட்டணியை விரும்பவில்லை என கூறப்படுகிறது.

கார் உள்ளவரை, கடல் உள்ளவரை, தமிழ் உள்ளவரை இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என அறிவித்திருந்தது பாமக. மேலும் தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தது பாமக. இந்த ஆட்சிக்கு எதிரான ஊழல் புகார்களை ஆளுநரை சந்தித்து கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது பாமக. முதல்வரையும், துணை முதல்வரையும் மிகவும் மோசமாக விமர்சித்து வந்தார் அன்புமணி ராமதாஸ்.

அதிமுகவுக்கு எதிராக மிகவும் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த பாமக தற்போது தேர்தலுக்காக அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து பலரது விமர்சனங்களையும் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த கூட்டணியை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பாமகவில் கலகம் ஏற்பட்டுள்ளது. கூட்டணிக்கு எதிராக பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி, நான் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இளைஞரணி செயலாளர் பதவி வகித்துவருகிறேன். அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது பிடிக்காத காரணத்தால் என்னுடைய பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நான் விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழலை எதிர்ப்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். தற்போது ஊழலைப் பற்றி பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், என்னால் கட்சியில் இருக்க முடியவில்லை. அதனால்தான் விலகுகிறேன் என்றார் அவர்.

Trending

Exit mobile version