இந்தியா

“போராட்டத்தை முடியுங்கள்… பேசலாம்…”- விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் மோடி ரிக்வஸ்ட்

Published

on

மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 70 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகளின் ஒற்றைக் கோரிக்கை, ‘அனைத்து வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப் பட வேண்டும்’ என்பது மட்டும் தான். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘வேளாண் சட்டங்களில் திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக ரத்து செய்ய முடியாது’ என்கிற நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறது.

இது குறித்து சுமூகத் தீர்வை எட்ட இரு தரப்புகளும் 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மேல் நடத்தின. ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு இணைய சேவையை முடக்கியுள்ளது மத்திய அரசு. அதேபோல அடிப்படை தேவைகளையும் முடக்கியுள்ளது. இதனால் பல தரப்பினரும் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக சர்வதேச அளவில் பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

உங்கள் போராட்டங்களை முடித்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் உட்கார்ந்து பேசி சுமூகத் தீர்வை எட்டலாம். நாடாளுமன்றம் சார்பில் உங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நான் அழைக்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை என்பது விவசாயப் பயிர்களுக்கு இருக்கும். அது இந்தச் சட்டங்கள் மூலம் அகற்றப்படாது. நாம் அனைவரும் முன்னேற வேண்டும். வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். வேளாண் சட்டங்கள் மூலம் வரும் சீர்திருத்தங்கள் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு பேசினார் மோடி.

 

seithichurul

Trending

Exit mobile version