தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்வி; பதில் சொல்ல தெரியாமல் திணறிய எல்.முருகன்!

Published

on

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான காரணம் பற்றி விளக்க தெரியாமல் திணறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக எரிபொருட்களின் விலையேற்றம் குறித்து முருகன், ‘பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய விலைகளை 2013 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதையும், அப்போதிலிருந்து இப்போது வரை அதன் விலை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அனைத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே தான் இருக்கின்றது.

2013 ஆம் ஆண்டு கேஸ் விலை 1000 ரூபாய்க்கு மேல் இருந்தது. தற்போது 700 ரூபாய் தான் உள்ளது. உலகின் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் விலை என்பது சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தான் இருக்கிறது. அதைப் போலவே இந்தியாவிலும் சர்வதேச சூழல்களைப் பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதார மந்த நிலை நிலவியது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உள்ளது.

அதேபோல இன்றைக்கு இந்தியாவுக்கு எண்ணெய் வர வேண்டும் என்றால் கப்பல் மூலமாகத் தான் வர வேண்டும். அப்படி வருவதற்கு லேட்டாவதும் ஒரு காரணமாகத் தான் இருக்கிறது’ என்று வினோதமான விளக்கத்தைக் கொடுத்தார்.

Trending

Exit mobile version