தமிழ்நாடு

பாலியல் வழக்கில் அதிமுக எம்எல்ஏ: தப்பிக்க முடியாது என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Published

on

பெரம்பலூரில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என பெண்களை விடுதிகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை வார்த்தைகளை கூறி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆடியோ டேப் உரையாடலை ஆதாரத்துடன் வெளியிட்டார் வழக்கறிஞர் அருள். அதில் பேசும் பெண், பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வனை நேரில் பார்க்க வற்புறுத்தினார்கள் என கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரம் போலவே இந்தப் பாலியல் புகாரை வெளியே சொல்ல முடியாமல் எப்படி பெண்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்த பெண்ணின் பேட்டி உணர்த்துகிறது. ஆனால், அந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகாரையும் கூட மூடி மறைக்கும் விதத்தில் தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறதே தவிர உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கிடவோ அல்லது பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்கிடவோ முன்வரவில்லை.

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் தோல்வி இப்போது பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது. பெரம்பலூர் பாலியல் புகார்களைத் தீவிரமாக விசாரித்து, அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அதிமுக எம்எல்ஏவைக் காப்பாற்றி விடலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக் கூடாது.

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version