விமர்சனம்

‘பென்குயின்’ குயின் தானா? திரை விமர்சனம்!

Published

on

கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் திறக்கப்படுவதில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அமேசான் பிரைம் நிறுவனம் சென்ற மாதம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தையும் இந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படத்தையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பென்குயின் திரைப்படமும் பொன்மகள் வந்தால் போல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள க்ரைம் திரில்லர் படமே.

கதை

கீர்த்தி சுரேஷூம் அவரது கணவருக்கும் ஒரு ஆண் குழந்தை. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடுகின்றனர். ஆனால் மகன் மற்றும் நட்பு ரீதியாலான உறவு மட்டும் தொடர்கிறது.

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். மகன் அஜய் 2 வயதில் கானாமல் போய்விடுகிறார். தேடிப் பார்த்து ஓய்ந்து போக, இரண்டாம் கணவருடன் கர்ப்பமாகிறார். 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மீண்டும் அவரது முதல் பையன் கிடைக்கிறான். ஆனால் பேச மாட்டேன் என்கிறான். அவன் கடத்தப்பட்ட பின்னணி என்ன? யார் அவனைக் கடத்தினார்கள்? எதற்காக என்பது தான் கதை.

பென்குயின் குயின் தானா?

படத்தில் கீர்த்தி சுரேஷை தவிரத் தெரிந்த முகம் என்று பெரிதாக யாரும் இல்லை. நடிகையர் திலகம் படத்திற்குப் பிறகு பெண் கதாபத்திறத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

க்ரைம் திரில்லர் படம் என்பதால், பார்வையாளர்களுக்குப் பலர் மீது சந்தேகம் வர வேண்டும் என்பதற்காகவே பல கதாபாத்திரங்கள் சொருகப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. என்ன தான் கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பிற்காக அவார்டு எல்லாம் வாங்கி இருந்தாலும் மொத்தமாகப் பார்த்தால் ஒரு நாடகத்தனமாகவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

132 நிமிடங்கள் ஓடும் படத்தில் டைட்டில் கார்டு போன்றவற்றைத் தவிர்த்தால் 125 நிமிடம். இது முழுவதுமே நிதானமாகவே நகருகிறது. படத்தின் கடைசி 40 நிமிடம் இருக்கும் போது வரும் டிவிஸ்ட்களால் படம் வேகம் எடுக்கும் என்று பார்த்தால், அதன் பின்பும் பல லாஜிக் ஓட்டைகளுடன் முடிவுக்கு வருகிறது. வில்லன் சாரி, வில்லி கதாபத்திறத்திற்கு கடைசி 5 நிமிடங்கள் வரை வேலையே இல்லை. கீர்த்தி சுரேஷின் இரண்டாம் கணவர் கதாபாத்திரம் எதற்கு என்றே தெரியவில்லை.

பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் பேருக்குத் தனது கடமையைச் செய்துள்ளார். சொல்லும் அளவிற்கு ஏதுமில்லை. படத்திற்கு முக்கிய பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு மட்டுமே. மலை பகுதியில் நடுக்கும் கதையைச் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார் என்று கூறலாம். உண்மையில் கார்த்திக் சுப்புராஜ் கதையைக் கேட்ட பிறகுதான் படத்தை தயாரித்தாரா என்று தான் கேட்க தோன்றுகிறது.

இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் படத்தை எடுத்துள்ள வேகத்திற்குத் தத்தித் தத்திச் செல்லும் பெங்குயின் கூட வேகமாகச் சென்று விடும் போல.

ஆக மொத்தத்தில் பெங்குயின் குயினாக இல்லை என்றாலும், ஒரு ஜோக்கராக கூட இல்லாமல் போய்விட்டது என்பது வருத்தம் அளிக்கிறது.

பென்குயின் – டிரெய்லர்

seithichurul

Trending

Exit mobile version