தமிழ்நாடு

என் இறுதி மூச்சு வரை தினகரன் தான் எனக்கு தலைவர்: முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!

Published

on

அமமுக முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளன. தங்க தமிழ்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க இந்த இரு கட்சிகளும் முயற்சி செய்த நிலையில் அவர் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் மற்றொரு அமமுக முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் பழனியப்பனை அதிமுகவுக்கு இழுக்க அமைச்சர் வேலுமணி முயன்று வருவதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் திமுக தரப்பும் பழனியப்பனை நாடி அவரிடம் டீல் பேசியதாக ஆடியோ ஒன்று சிக்கியது. இந்த ஆடியோ தங்க தமிழ்செல்வன் ஆடியோ போல வெளியில் பெரிதாக பரவாமல் அமமுக வட்டாரத்தில் வலம் வந்தது.

அமமுக முக்கிய நிர்வாகியான பழனியப்பனிடம், செந்தில் பாலாஜியும், சபரீசனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அந்த பேச்சுவார்த்தை பழனியப்பன் செல்போனில் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதில், நீங்கள் திமுகவுக்கு வாருங்கள். நீங்கள் சொல்பவருக்கு அல்லது உங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கிறோம்.

உங்கள் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உங்களிடம் ஒப்படைக்கிறோம். அதற்கு நீங்களே வேட்பாளர்களைத் தேர்வுசெய்து, தேர்தல் செலவுகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைப்பேசி மூலம் பதில் அளித்த அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பனிடம் நீங்களும் திமுகவில் சேர உள்ளதாக செய்திகள் வருகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. இதனை மறுத்த பழனியப்பன், என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர், அமமுகவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்ற தகவலில் உண்மையில்லை. என்ன நோக்கத்திற்காக இங்கு வந்தேனோ அது நிறைவேறும் வரை இங்குதான் இருப்பேன் என்றார் திட்டவட்டமாக.

seithichurul

Trending

Exit mobile version