உலகம்

பாகிஸ்தான் 1992 ஆம் ஆண்டே அணுசக்தி திட்டத்தை முடிந்துவிட்டது.. முன்னாள் அதிகாரி சொன்ன ஷாக் தகவல்!

Published

on

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் 1983 ஆம் ஆண்டு முன்னாள் சர்வாதிகாரி ராணுவ ஜெனரல் ஜியா உல் ஹக் காலத்திலேயே அணு ஆயுத ஆராய்ச்சியை தொடங்கி 1992 ஆம் ஆண்டு முடிந்துவிட்டதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் சையதா அபிதா ஹுசைன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் நவாஸ் ஷெரிப் அமைச்சரவையில் இடம்பெற்றவரும் அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதருமான சையதா அபிதா ஹுசைன் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் முதல் ஒசாமா வரை பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது அவர் தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் கூட ஜனாதிபதி குலாம் இஷாக் கானின் பரிந்துரையின் அடிப்படையில் அவர் அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் பணிபுரிந்த காலகட்டங்களில் அவரது பெரும்பாலான தொடர்புகள் ஜனாதிபதி இஷாக் கானுடன் இருந்தன. பாகிஸ்தான் 18 மாதங்களில் அணுசக்தி திட்டத்தை முடிக்கும் வரை, அமெரிக்கர்களை பேச்சுவார்த்தையிலேயே வைத்திருக்க வேண்டி ஜனாதிபதி இஷாக் கான் தனக்கு வேலை கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹுசைனின் கூற்றுப்படி, அமெரிக்க ராஜாங்க அதிகாரிகள், செனட் உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட அமெரிக்க நிர்வாகமே அணுசக்தி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக பாகிஸ்தானுக்கு பலமுறை அறிவுரை வழங்கியுள்ளது.

நவீன கருவிகள் இல்லாத நிலையில் தனக்கும் ஜனாதிபதி இஷாக் கானுக்கும் இடையிலான தகவல்தொடர்பு மூலத்தைப் பற்றி கேட்டபோது, அந்த 18 மாதங்களில் ஜனாதிபதியிடமிருந்து விளக்கங்களைப் பெறுவதற்காக ஐந்து முறை பாகிஸ்தானுக்கு நேரடியாக பயணம் செய்ததாக ஹுசைன் கூறினார். தொலைபேசி உரையாடலை இடைமறித்து ஒட்டுக்கேட்க வாய்ப்புள்ளதால் அதை பயன்படுத்துவதை பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அணுசக்தி திட்டம் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்ததால் ஹுசைனின் பெரும்பாலான உரையாடல்கள் பிரதமரை காட்டிலும் ஜனாதிபதியுடன் தான் இருந்தன. ஜனாதிபதி இஷாக் கான் யாரையும் நம்பாததும் இதற்கு ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரம் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன்னை தவிர்த்து அதிகமாக ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டது குறித்து ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டது கிடையாது என்றும் ஹுசைன் கூறினார்.

அல்கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ஆதரித்து நிதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார் . ஒசாமா பின்லேடன் ஒரு காலத்தில் மியான் நவாஸ் ஷெரீப்பை ஆதரித்தார். இருப்பினும் அது ஒரு சிக்கலான கதை. ஆனால் ஒருகாலத்தில் ஒசாமா மிகவும் பிரபலமாக இருந்தார், அமெரிக்கர்கள் உட்பட அனைவராலும் விரும்பப்பட்டார் என்றும் ஹுசைன் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version