கிரிக்கெட்

அனல் பறந்த ஆட்டம்: 14 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

நாட்டிங்காம் ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இமாம் உல் ஹாக், ஃபஹார் சமாம் ஜோடி 82 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்தனர்.

பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முகமது ஹஃபீஸ் 84 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், வோக்ஸ் மற்றும் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெசன் ராய் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெய்ர்ஸ்டவ் 32 ரன்னில் வெளியேற இங்கிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தவாரே இருந்தனர். ஆனால் விதிவிலக்காக ரூட் மற்றும் பட்லர் ஆகியோர் மட்டும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டு இருந்தனர்.

குறிப்பாக ஜாஸ் பட்லர் 76 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார். ஜோய் ரூட்டும் 107 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணியால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 14 ரன்களில் வெற்றிபெற்றது. 84 ரன்கள் எடுத்தும், ஒரு விக்கெட்டும் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் ஹஃபீஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இன்றைய போட்டி: ஆஃப்கானிஸ்தான் Vs ஸ்ரீலங்கா
இடம்: கார்டிஃப்
நேரம்: 3 மணி

seithichurul

Trending

Exit mobile version