சினிமா செய்திகள்

பா ரஞ்சித்தின் ‘சார்பாட்டா பரம்பரை’ படம் எப்படி?

Published

on

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் இன்று அதிகாலை அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்து பலர் பாராட்டி டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

கடந்த 80களில் வட சென்னையில் நடக்கும் ஆக்ரோஷமான குத்துச்சண்டை போட்டி குறித்த கதை தான் இந்த சார்பாட்டா பரம்பரை’. பா ரஞ்சித் படம் என்றால் பொதுவாக ஜாதி குறியீடுகள் இருக்கும். அது இந்த படத்திலும் இருந்தாலும் அதிகமாக இல்லை என்பது ஒரு ஆறுதல்.

பாக்ஸிங் மற்றும் அதன் பின்புலம் காரணமாக கணவனை இழந்த ஒரு பெண் தன் மகனையும் இழந்து விடக்கூடாது என்று போராடுவது தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

ஆர்யா இந்த படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. குறிப்பாக குத்து சண்டை போடும் காட்சிகள் நம்மை அறியாமல் கைதட்ட வைக்கிறது. உடல் எடையை அதிகப்படுத்தி கட்டுடலாக பாக்ஸிங்கிற்கு ஏற்றவாறு அவர் உண்மையாகவே மாற்றியுள்ளது பாராட்டத்தக்கதாகும். ஆர்யாவின் மற்ற படங்களின் நடிப்பின் சாயல் இதில் கொஞ்சம் கூட இல்லை என்பதும் இந்த படத்தின் பிளஸ் ஆகும்.

ஆர்யா ஜோடியாக துஷாரா நடித்துள்ளார். காதல், கோபம், பாசம், வீரம் என அனைத்தையும் ஒரு நடிகை வெளிப்படுத்தி உள்ளார் என்றால் அது உண்மையில் ஆச்சரியத்தக்க ஒன்றுதான். மேலும் பசுபதி, சுந்தர், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்பட அனைவரும் தங்களுடைய கேரக்டரை புரிந்து நடித்துள்ளனர். குறிப்பாக பசுபதி குத்துச்சண்டை வாத்தியார் ஆகவே மாறிவிட்டார் என்று கூறினால் மிகையாகாது.

இரண்டு பரம்பரை பாக்ஸிங் செய்து சண்டை போடும் குழுவினர்கள் நடுவில் அரசியல் புகுந்தால் என்ன நடக்கும் என்பதை நன்கு அலசி ஆராய்ந்து இயக்குனர் பா ரஞ்சித் திரைக்கதை அமைத்துள்ளார். எமர்ஜென்சி நேரத்தில் அரசியல்வாதிகள் எடுத்த நிலைப்பாடுகளால் சாதாரண மக்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் தெளிவாக விளக்கி உள்ளார்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் நீளத்தை சொல்லலாம். ஓடிடியில் பார்ப்பதால் பலர் படத்தை ஸ்கிப் செய்து பார்க்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் கலையரசன் கேரக்டர் குழப்பமாக உள்ளது என்பதும் ரஞ்சித்தின் ஜாதி அரசியல் ஆங்காங்கே வருவதும் இந்த படத்திற்கு தேவையில்லாததாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் பாக்சிங் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.

Trending

Exit mobile version